ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ் வேர்ட்பிரஸ் பயனாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்
பகீ

மொழிபெயர்ப்பின்போது கவனிக்க வேண்டியவை.

நீங்கள் வேர்ட்பிரஸினை மொழிபெயர்க்க ஆர்வமாய் உள்ளவர்கள் எனின் கட்டாயம் இப்பதிவை வாசியுங்கள்.

ஒரு மென்பொருளை மொழிபெயர்ப்பதென்பது சாதாரணமாக ஒரு பணியல்ல. எனவே மொழிபெயர்ப்பின் போது மிக முக்கியமான விடயம் நீங்கள் எதை மொழிபெயர்க்கிறீர்களோ அதில் உங்களுக்கு பூரணமான பரீட்சயம் இருக்கவேண்டும். எனவே வேர்ட்பிரஸை நீங்கள் மொழிபெயர்க்கப்போகின்றீர்கள் என்றால் முதலில் நீங்கள் வேர்ட்பிரஸினை நிறுவி அதனை குறைந்தது ஒரிரண்டு கிழமைகளாவது எல்லாவிதங்களிலும் பயன்படுத்தி பார்க்க வேண்டும்.

இதன் மூலம் மொழிபெயர்ப்புச்செய்யும்போது ஆங்கில சொற்களை தமிழ்ப்படுத்துவது என்றில்லாமல் தமிழுக்கிசைவான சாதாரண பயனாளர்களுக்கு புரியக்கூடிய தமிழில் எழுத முடியும். உதாரணமாக ஆங்கிலத்தில் உள்ள ஒரு பிழைச்செய்தியை மொழிமாற்றம் செய்யும்போது அப்பிழைச்செய்தி எங்கு காட்டப்படும் என உங்களுக்கு தெரிந்திருந்தால் நீங்கள் உடனே அதனை சரியான தமிழில் சரியான வசன அமைப்பில் உருவாக்கி விட முடியும்.

இலகுவான மொழிநடையை கையாழுதலும் மொழிமாற்றத்தின் போது முக்கிய ஒரு விடயமாகும். update என்னும் சொல்லுக்கு இற்றைப்படுத்தல் என்பதை விட மேம்படுத்துதல் என்பது ஒரு இலகுவான சொல்லாகும். இதுதான் சரியான பதம் என்பதற்கப்பால் ஒரு சாதாரண பயனாளர் எவ்வாறு அதனை விளங்கிக்கொள்வார் எனபதை கவனத்தில் எடுக்க வேண்டும்.

இன்னுமொரு மிகமுக்கியமான விடயம் மொழிமாற்றப்படக்கூடாத இடங்களில் ஏனைய சொற்களை சரியாக பயன்படுத்தல். உதாரணமாக பக்கங்களாக பிரிக்கப்பட்டிருத்தல் தொடர்பான ஒரு இடத்தில் %1$s of %2$s என காட்டப்பட்டிருந்தால் அதனை %2$s இல் %1$s ஆக மாற்றுதலே பொருத்தமாகும். ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பென்பதற்காக %1$s மற்றும் %2$s என்பன அவ்வவ்விடத்திலேயெ இருக்கவேண்டும் என்கின்ற தேவையில்லை.

பிரியத்துடன்
ஊரோடி பகீ.

வேர்ட்பிரஸ் தமிழ் மொழியில்.

நீண்டகாலமாகவே வேர்ட்பிரஸ் பலராலும் தமிழாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் ஒரு தொடர்ச்சித்தன்மை இல்லாத காரணத்தினாலும் முதலில் செய்பவர்கள் பின்னர் ஆர்வம் குன்றி நிறுத்தி விடுவதனாலும் சிலகாலமாக தமிழ் மொழிபெயர்ப்புக்கள் வெளிவரவில்லை. அத்தோடு வேர்ட்பிரஸின் தமிழ் தளங்களும் செயலிழந்து விட்டன.

ஒரு நீண்டகால வேர்ட்பிரஸ் பயனாளர் என்ற வகையில் எனது ஓய்வு நேரங்களில் வேர்ட்பிரஸ் மற்றும் அதனோடு இணைந்த சேவைகளை தமிழ்ப்படுத்துவது என்ற முயற்சியை ஆரம்பித்திருக்கின்றேன். இது ஒரு தனிப்பட்ட முயற்சியாய் அல்லாமல் ஒரு கூட்டு முயற்சியாய் அமைய வேண்டும் என்ற பேரவா என்னுள்ளே எப்போதும் போல இருக்கின்றது. உங்களால் முடிந்தளவு https://translate.wordpress.org/ தளத்திற்கு சென்று தமிழ்(இலங்கை) என்பதனை மொழிமாற்றம் செய்து உதவுங்கள். என்னால் முடிந்தளவு வேகமாக உங்கள் மொழிமாற்றங்களை சரிபார்த்து, அங்கீகரித்து தமிழ்ப்பதிப்புகளை சரியான நேரத்தில் வெளியிட முனைவேன்.

உங்களிடம் ஏதாவது கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

அன்புடன்
ஊரோடி பகீ