மொழிபெயர்ப்பின்போது கவனிக்க வேண்டியவை.

நீங்கள் வேர்ட்பிரஸினை மொழிபெயர்க்க ஆர்வமாய் உள்ளவர்கள் எனின் கட்டாயம் இப்பதிவை வாசியுங்கள்.

ஒரு மென்பொருளை மொழிபெயர்ப்பதென்பது சாதாரணமாக ஒரு பணியல்ல. எனவே மொழிபெயர்ப்பின் போது மிக முக்கியமான விடயம் நீங்கள் எதை மொழிபெயர்க்கிறீர்களோ அதில் உங்களுக்கு பூரணமான பரீட்சயம் இருக்கவேண்டும். எனவே வேர்ட்பிரஸை நீங்கள் மொழிபெயர்க்கப்போகின்றீர்கள் என்றால் முதலில் நீங்கள் வேர்ட்பிரஸினை நிறுவி அதனை குறைந்தது ஒரிரண்டு கிழமைகளாவது எல்லாவிதங்களிலும் பயன்படுத்தி பார்க்க வேண்டும்.

இதன் மூலம் மொழிபெயர்ப்புச்செய்யும்போது ஆங்கில சொற்களை தமிழ்ப்படுத்துவது என்றில்லாமல் தமிழுக்கிசைவான சாதாரண பயனாளர்களுக்கு புரியக்கூடிய தமிழில் எழுத முடியும். உதாரணமாக ஆங்கிலத்தில் உள்ள ஒரு பிழைச்செய்தியை மொழிமாற்றம் செய்யும்போது அப்பிழைச்செய்தி எங்கு காட்டப்படும் என உங்களுக்கு தெரிந்திருந்தால் நீங்கள் உடனே அதனை சரியான தமிழில் சரியான வசன அமைப்பில் உருவாக்கி விட முடியும்.

இலகுவான மொழிநடையை கையாழுதலும் மொழிமாற்றத்தின் போது முக்கிய ஒரு விடயமாகும். update என்னும் சொல்லுக்கு இற்றைப்படுத்தல் என்பதை விட மேம்படுத்துதல் என்பது ஒரு இலகுவான சொல்லாகும். இதுதான் சரியான பதம் என்பதற்கப்பால் ஒரு சாதாரண பயனாளர் எவ்வாறு அதனை விளங்கிக்கொள்வார் எனபதை கவனத்தில் எடுக்க வேண்டும்.

இன்னுமொரு மிகமுக்கியமான விடயம் மொழிமாற்றப்படக்கூடாத இடங்களில் ஏனைய சொற்களை சரியாக பயன்படுத்தல். உதாரணமாக பக்கங்களாக பிரிக்கப்பட்டிருத்தல் தொடர்பான ஒரு இடத்தில் %1$s of %2$s என காட்டப்பட்டிருந்தால் அதனை %2$s இல் %1$s ஆக மாற்றுதலே பொருத்தமாகும். ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பென்பதற்காக %1$s மற்றும் %2$s என்பன அவ்வவ்விடத்திலேயெ இருக்கவேண்டும் என்கின்ற தேவையில்லை.

பிரியத்துடன்
ஊரோடி பகீ.

4 thoughts on “மொழிபெயர்ப்பின்போது கவனிக்க வேண்டியவை.

 1. மொழி பெயர்க்கும் விதம் பற்றிய அருமையான தகவல்களைப் பதிந்த நண்பர் பகீ அவர்களுக்கு – நன்றிகள்.

  நானும் பரீட்சார்த்தமாக சில மொழிபெயர்ப்புக்களைச் செய்து பார்த்தேன். தங்களது அபிப்பிராயத்தின் பின்னர் தொடரலாம்னு நினைத்தேன். எனக்கு ஒரு சந்தேகம் நண்பரே..

  அதாவது – Update என்பதற்கு மேம்படுத்தல் என்று மொழிபெயர்ப்புச் செய்தால், Upgrade என்பதற்கும் அதே வசனத்தைப் பயன்படுத்துவதில் தவறில்லையா..?

  தங்களது – இந்தப்பதிவின் மூலம் தமிழ் மொழிபெயர்ப்பானது ஆங்கிலத்துக்கு அச்சொட்டாக நிகராக இருக்க வேண்டும் என்பதை விட – அது சொல்லும் கருத்தை கிரகித்து பிரதிபளிப்பதாக – எளிய மொழி நடையில் சுருக்கமாக இருந்தால் போதுமென விளங்குகின்றது.

  முயற்சிக்கலாம நண்பரே – இது வெறும் ஆரம்பம்தான்..

  நட்புடன்
  மஸாகி – 02022011

 2. அன்புடன் மாஸாகி,

  உண்மையில் ஆங்கிலத்தில் இவை வேறு வேறு சொற்களாக இருந்தாலும் ஒரு தமிழ் பயனாளருக்கு இரண்டுக்குமே மேம்படுத்தல் என்கின்ற சொல் விளக்கமளிப்பதாக இருக்கும் என்பதே என் எணணம். upgrade database என்பதற்கு தரவத்தளத்தை மேம்படுத்தல் என்பதும் update post என்பதற்கு பதிவை மேம்படுத்தல் என்பதும் விளக்கமாக உள்ளது தானே?

  பகீ.

 3. ஆம்.. நண்பரே.. நீங்கள் சொல்வதும் சரிதான். Upgrade என்பதற்கு தரமுயர்த்துதல் என்ற சொல்லையும் விரும்பினால் மாற்றீடாக பயன்படுத்தலாம் என்று நினைக்கின்றேன்.

  ஒரு அவசர – இணைய வடிவமைப்பு பணியில் தற்போது ஈடுபட்டிருப்பதால், மொழிபெயர்பில் எனது பங்களிப்பு சிலநாட்களுக்கு மந்தமாக இருப்பதையிட்டு வருந்துகின்றேன்.

  முயற்சிகள் – தொடரட்டும்.. இதுபோன்ற வேறு மொழிபெயர்ப்புப் பணிகளிலும் எதிர்காலங்களில் என்னால் முடிந்த பங்களிப்புக்களை வழங்கி எனது ஓய்வு நேரத்தினை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள தூண்டுகோலாக இருந்த தங்களுக்கு எனது நன்றிகள்.

  இவன் – மஸாகி
  06.11.2011

  *(“மா”ஸாகி அல்ல)

மறுமொழியொன்றை இடுங்கள்